Wednesday, September 28, 2016

தோல்வி என்பது தாமதமே. நீங்கள் தோற்க்கடிக்கப்படவில்லை

தோல்வி என்பதன் அர்த்தம் தாமதமே. நீங்கள் இன்னும் தோற்க்கடிக்கப்படவில்லை. மேலே சொன்ன வாக்கியங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போட முடியுமா. முடியும். நீங்கள் தோல்வி அடைந்து விட்டதாக நினைக்கும் போது இந்த வாக்கியங்களை நினைவு கொள்ளுங்கள். மீண்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என நினைத்து செயலில் இறங்கி விடுவீர்கள். இதற்கு உதாரணமாகக் குறிப்பிட விரும்புவது என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். இது நடந்தது 2000-2001 ம் வருடங்களில்.

MCA படிப்பில் மூன்றாவது செமஸ்டரில் கப் வைத்தால் சில சிரமங்கள் உள்ளன. அதாவது 3வது தேர்வு முடிவுகள் 4வது தேர்வு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு MK யுனிவர்சிட்டியுல் சொல்லுவார்கள். அதை 4வது தேர்வுடன் சேர்த்து எழுதினால் 5வது தேர்வு நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு முடிவு அறிவிப்பார்கள். இங்கு தான் சிக்கலே. 5வது செமஸ்டர் ஆரம்பம் முதலே campus interview க்கு கம்பெனிகள் வர ஆரம்பிக்கும். பெரும்பாலான கம்பெனிகள் முதல் 3 மாதங்களில் தேர்வு அடையாவிட்டால் கம்பெனிகள் அமைவது கடினம். பல கம்பெனிகள் அரியர் இல்லாத மாணவர்களைத்தான் தேர்வு எழுத அனுமதிப்பார்கள்.

இந்த நிலையில் மூன்றாவது செமஸ்டரில் ஒரு பேப்பரில்(system engineering) அரியர்(cup) வைத்தேன். பள்ளியில் இருந்து ஒரு பாடத்தில் கூட பெயில் ஆனது இல்லை என்ற நினைப்பே மனதில் ஒரு வித பயத்தையும் அழுத்தத்தயும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதி அறையில் என் போர்வையப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல என்ன செய்வது என நினைத்து கண்ணில் கண்ணீர் வழிய படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் நுழைந்த சில வகுப்புத் தேழர்கள் சொன்ன வார்த்தைகள் என்னை மேலும் அழுதியது. நான் இருப்பதை அறியாமல், பொண்ணுங்க பின்னாடி சுற்றினால் x-க்கு(அட நாந்தாங்க) ஏற்பட்ட கதிதான். இனிமேல் மேலே வருவது முடியாது எனப் பேசிச் சென்றனர்.

இரண்டு நாட்கள் மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்து விட்டு விடுதியில் இருந்து வீட்டிற்குச் சென்றேன். அன்று மதியம் 2மணி,பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நாடகம். அதில் மேடையில் "Failure means delay. not defeat" என எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்தவுடன் உடனே மனதில் ஒரு வெறி வந்தது. நீண்ட நேரம் தாகமாக இருந்து தண்ணீர் கிடைத்தால் கிடைக்குமே ஒரு உணர்வு, அது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.

அடுத்தடுத்த முயற்சியில் இறங்கினேன். நேரத்தை வீணாக்காமல் ஜாவா படிக்க ஆரம்பித்தேன். 24 மணி நேரமும் அதைப் பற்றித்தான் சிந்தனை. ஒரு மினி பிராஜக்ட் ஜாவாவில் ஆரம்பித்து அது மெகா பிராஜக்ட் லெவலில் சென்று கொண்டிருந்தது. அப்போது என் java code என்னவோ தரம் இல்லாதது(as per coding standard) தான். அதன் பயன்பாடு மற்றும் output நன்றாக அமைந்தது. அதை வைத்து என்னை நான் மார்க்கெட் செய்ய ஆரம்பித்தேன்.

6வது செமஸ்டரில் அத்தி பூத்தாற்போல ஒரு நல்ல கம்பெனி campus interviewக்கு வந்தது. மொத்தம் சுமார் 150 பேர் கலந்து கொண்டோம். முன்பே கம்பெனியைப் பற்றியும் அவர்களின் கேள்வித்தாள் முறை பற்றியும் வேறு சில கல்லூரிகளில் கேட்டு வைத்துக் கொண்டேன். போருக்குத் தயாராவது போல ஒரு வெறி, Aptidude R.S அகர்வால் புத்தகத்தில் இருந்து 90 கேள்விகள். நேரம் 90 நிமிடங்கள். யாராலும் முழுமையாக முடிக்க முடியாது. நான் சுமார் 45 பதில்கள் சரியாக விடை அளித்து இருப்பேன். கடைசி இரண்டு நிமிடங்கள், மீதமிருந்த கேள்விகளுக்கு random ஆக அடித்து விட்டேன். ஆனாலும் மதிப்பெண்கள் வெளியிட்ட போது என்னுடைய இடம் 72. முதல் 80 பேர்களை group discussion கு தேர்ந்தெடுத்தார்கள். 10 பேர்கள் கொண்ட குழுவாக 8 குழுக்கள். காரசாரமாக விவாதித்த பின்னர், என்னுடைய நிலை 13. அதாவது 72 வது இடத்தில் இருந்து 13க்கு முன்னேற்றம். முதல் 15 மாணவர்களை நேர்காணலுக்கு அழைத்தார்கள். அங்கு நான் பேசவில்லை. நான் செய்த மினி பிராஜக்ட் பேசியது. 5வது செமஸ்டரில் நான் செய்த உழைப்பு பேசியது.

நேர்காணலின் முடிவில் என்னுடைய இடம் 3. முதல் மூன்று பேர்களை தேர்வு செயவதாக அறிவித்த போது என் மனதில் ஓடியது Failure Means Delay. Not Defeat.

இப்போது இந்த வார்த்தைகளை நினைக்கும் போதும் மனது re-charge ஆகிறது.

இனி, நேர்காணலில் எப்படிப் பேசுவது என்று அடுத்த பதிவில் காண்போம்.

Monday, April 24, 2006

நேர்காணலில் எப்படிப் பேசுவது?

பெரும்பாலான மாணவர்கள் மற்றும் job switch பண்ண நினைப்பவர்களுக்கு நேர்காணல் என்பது ஒரு வித பயத்தையே ஏற்படுத்தும். என்ன கேள்விகள் கேட்கப்படுமோ எப்படிப் பதில் சொல்வது என்ற ஒருவித மன நெருக்கடி ஏற்படும்.

நேர்காணலை(interview) மிகவும் சுலபமாக எதிர்கொள்ளலாம். அதற்கு சில நாட்கள் home work செய்ய வேண்டும்.

நான் சொல்லும் விசயங்கள் கணிப்பொறித் துறையில் technical மற்றும் personal(HR) interview ஆகியவற்றினை சுலபமாக எதிர்கொள்ள உதவும்.
முதலில் உங்களுக்கும் கேள்விகள் கேட்பவர்களுக்கும் ஒரு ஒத்த அலைவரிசையை( same frequency) ஏற்படுத்த வேண்டும். அதை நேர்காணல் ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடங்களில் ஏற்ப்படுத்த வேண்டும்.
அதை என் அனுபத்தில் நான் சொல்லும் வழிகளிலும் செய்யலாம்.

நேர்காணலில் கேள்விகளுக்கு மிக நேரடியாகப் பதில் சொல்லாதீர்கள். உதாரணம்: கேள்வி : உங்களுக்கு ஜாவா வில் வேலை செய்யத் தெரியுமா? பதில் 1 :தெரியும்/தெரியாது (இது நேரடியான பதில்)

ஆனால் இதே போல நேரடியாகப் பதில் சொல்வதால் உங்களுக்கும் கேள்வி கேட்பவருக்கும் ஒரு ஒத்த அலை வரிசையை ஏற்படுத்த முடியாது. அடுத்த கேள்விக்குப் போய்விடுவார் ஒருவித திருப்தி இல்லாமல்.

பதில் 2: ஜாவா என்பது தற்போது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப் பட்டுவரும் ஒரு தொழில்நுட்பம். அதை நான் கற்றுக் கொண்டு வருகிறேன். இன்னும் ஒரு சில மாதங்களில் என்னால் திறமையாக ஜாவாவில் வேலை செய்ய முடியும்.

பதில் 2 ன் மூலம் சில விசயங்கள் கேள்வி கேட்பவருக்கு சொல்லப் படுகிறது. அதாவது நீங்கள் ஜாவா படித்து வருகிறீர்கள். நீங்கள் புதிதாக தொழில் நுட்பங்களைப் படிபவர். இது தான் இங்கு முக்கியம்.
நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது, என்ன கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வது என யோசித்து வைத்துக் கொண்டால், உண்மையான நேர்காணலில் கேள்வி கேட்டவுடனேயே(quick response) பதில் சொல்ல முடியும். இதைத்தான் நான் home work என்று சொன்னேன்.

இரண்டாவதாக நான் சொல்வது கேள்வி கேட்பவரை உங்கள் வழிக்கு இழுத்து வருவது. இதுவும் சாத்தியமா?. சாத்தியம் தான். நான் கலந்து கொண்ட 9 நேர்காணல்களில் 6 நேர்காணல்களில் அப்படிச் செய்ய முடிந்தது. ஒரு கேள்விக்கான பதிலிலேயே அடுத்த கேள்விக்கான clue இருக்க வேண்டும். கேள்வி கேட்பவர் பெரும்பாலும் பதிலில் அதைக் கவனித்து விடுவார். அவர் கொஞ்சம் கவனம் இல்லாதவராக இருந்தால் அந்தக் கேள்வியையே கேட்பார்.

உதாரணம் :- கேள்வி : (Explain how JDBC works)JDBC எப்படி வேலை செய்கிறது அல்லது ஜாவாவில் எப்படி JDBC யை உபயோகிப்பது.

பதில்கள் : உங்கள் பதில்களில் DriverManager, Statement,PreparedStatement,ResultSet பற்றியெல்லாம் சொல்லிவிட்டு. நான்கு வகையான driverகள் உள்ளன என்பதையும் சொல்ல மறக்காதீர்கள்.
இந்தப் பதிலைக் கேட்டவுடன் அடுத்த கேள்வியானது பெரும்பாலும் நான்கு வகையான driverகள் பற்றியே இருக்கும். அதற்குப் பதில் சொல்ல நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் விரித்த வலையில் நீங்களே விழுந்து விடுவீர்கள்.

இவைகள் எல்லாம் ஒரு சில sample தான். இவற்றை உபயோகித்து 2004ம் ஆண்டில் 9நிறுவனங்களின் நேர்காணலை சந்தித்து 7ல் தேர்ச்சி பெற்றேன்.இது போல வேறு சில வழிமுறைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். அவர்களுன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.

மேலே சொன்ன வழிமுறைகள் எல்லாம் தொழில்நுட்ப விசயங்கள் தெரிந்து, நேர்காணலை அனுகும்முறையில் தடுமாறுபவர்களுக்குத்தான் செல்லுபடியாகும்.

கல்லூரி மாணவர்களுக்கு: உங்களுக்கு அதிகமாக technical கேள்விகள் அதிகம் கேட்கப் படமாட்டாது. அதனால் சிரமம் அதிகம் இல்லை. அனால் போட்டி அதிகம் இருக்கும். அதனால் தகுதிச் சுற்றிலேயே அனைவரையும் முந்திச் செல்வது முக்கியம். நேர்காணலில் மற்றவர்களிடம் இருந்து உங்களைத் தனித்துக் காட்ட ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்வது அவசியம். நல்ல பயனுள்ள ஒரு ப்ராஜெக்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் body language மிகவும் முக்கியமானது. கீழ்கண்ட தளங்களில் சென்று பாருங்கள்.
http://www.deltabravo.net/custody/body.php http://www.bodylanguagetraining.com/examples.html http://www.bodylanguagetraining.com/phrases.html http://www.bodylanguagetraining.com/blatwork.html http://www.bodylanguagetraining.com/presentations.html

Saturday, April 22, 2006

தினமலரில் தன்னம்பிக்கை

என்னுடைய தன்னம்பிக்கை வலைப்பதிவு குறித்து 20-ஏப்ரல்-2006 ம் தேதி தினமலரில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று தான் கவனித்தேன்

தினமலருக்கு என் நன்றிகள்.
-- X-எக்ஸ்

தமிழ்மணம் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் தன்னம்பிக்கை வருவதில்லை. இது குறித்து கடந்த மாதம் listadmin@thamizmanam.com க்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். தமிழ்மண நிர்வாகம் தன்னம்பிக்கையை மறுமொழிகள் திரட்ட ஆவண செய்யும் படிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

Sunday, March 26, 2006

ஓரு வித்தியாசமான சிந்தனை

இன்றைய அரட்டை அரங்கத்தில் ஒரு பெண்மணி கூறிய கருத்து,

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

Saturday, March 25, 2006

நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது

இன்றைய வாரமலரில் இது உங்கள் இடம் பகுதியில் ஏ.ஸ்.தேவன் என்பவர் தன்னுடைய அனுபவத்தை எழுதியிருந்தார்.
அது அப்படியே உங்களுக்கு.

நான் சென்னையில் டிரைவராக பணிபுரிந்த போது, ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை கே.கே.நகர் அருகில், ஒரு மணி நேரம்
காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக்
கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.

பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில்
ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையான
ஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

தற்போது நான் நான்கு பேர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு சொந்தத் தெழில் செய்கின்றேன். இளைஞர்களே... வாழ்க்கையில்
எற்படும் தோல்விகளையும், ஏமற்றங்களையும் கண்டு மனம் தளராமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
-- நன்றி தினமலர்-வாரமலர்.

வாழ்க்கையில் நமக்குத் தேவையானவைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. இதைத்தான் கிருஷ்ணர் "நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது" என்று கூறினாரோ?

வெற்றியின் ரகசியம்

தோல்வி எனும் காயை பக்குவமாகக் கனிய வைத்தால் வெற்றி இலவசம்

Friday, March 24, 2006

ஒரு பொன்மொழி

இது கொஞ்சம் பழசு தான். எனக்குப் பிடித்தது.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்

வணக்கம் முதல் பதிவு

தமிழ்வலைப் பதிவர்களுக்கு என் வணக்கம்.
கடந்த நான்கு மாதங்களாக பல பதிவர்களின் பதிவுகளைப் படித்து வந்துள்ளேன். எனக்கும் வலைப் பதிவு என்ற பெரிய உலகத்தில் ஒரு சிறிய இடம் கிடக்கும் என்ற தன்னம்பிக்கையோடு வலைப்பதிவினை ஆரம்பிக்கின்றேன்.

இங்கு சாதாரண மக்களுக்குப் பிடித்தமான சில விசயங்கள் சொல்லப்படும். என் வலைப்பதிவின் தலைப்பிற்கு பொருத்தமான சில விசயங்களும் அவ்வப்போது இங்கு சொல்லப்படும்.

இப்படிக்கு தங்களின் மேலான ஆதரவை விரும்பும்
X - எக்ஸ்

Thursday, March 23, 2006

முதல் பதிவு

சோதனை